Tuesday, July 13, 2010

என் வாழ்வே உனக்காக

என் வாழ்வே உனக்காக

-----------------------------



1990 ம் ஆண்டு நாட்டின் போரின் காரணமாக சந்துருவின் குடும்பம் இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். தனுஸ்கோடியை அடுத்து இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் மண்டபம் முகாமில் மூன்று நாட்களாக அங்கே அவர்களுக்கு தங்குவதற்குரிய வசதிகள் கொடுத்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஈரோடு மாவட்டத்தில் ஒரு முகாமிற்கு அவர்களையும் சேர்த்து ஒரு 100 குடும்பத்தை அனுப்பினார்கள். சந்துருவின் குடும்பத்தவரால் இரண்டு மாதங்கள்தான் அந்த முகாமில் இருக்க முடிந்தது. பின்னர் அவர்கள் வீடு வாடகைக்கு ஒன்று எடுத்து முகாமைவிட்டு வெளியேறி விட்டனர்.



நாட்டில் வசதியாக வாழ்ந்தவர்கள். அகதி முகாமில் அந்த குறுகிய இடத்தில் அவர்களால் சமாளித்துக் கொள்ள முடியவில்லை.



இந்த வேளையில் சந்துருவும் பாடசாலைப் போகத் தொடங்கி விட்டான்.

9 ம் வகுப்பில் போய் சேர்ந்தான் சந்துரு. சந்துரு படிப்பில் நல்ல கெட்டிக்காரன். லேசில் யாருடனும் பழகவே மாட்டான். அதுவும் பெண் பிள்ளைகள் என்றால் சொல்லத் தேவையே இல்லை.



இந்த நிலையில் அதே வகுப்பில் வந்து சேர்ந்தாள் சந்தியா. சந்தியாவுக்கு சிறுவயதிலே அப்பா இறந்து விட்டார் அம்மாவுடன்தான் இருந்தார். சந்தியாவின் குடும்பமும் அதே அகதி முகாமில்தான் இருந்தார்கள். சந்தியா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.



அகதி முகாமில் பதினைந்து நாளுக்கொருதடவை குடும்பத் தலைவருக்கு 100 ரூபாவும் அதற்குப் பிறகு பிள்ளைகளின் வயதுக்கு ஏற்றவாறு பணமும் வழங்கப்படும். அதில் சந்தியாவுக்கு 80 ரூபா கொடுக்கப்படும்.



ஒரு குடும்பத்தில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு மாதத்துக்கு ஒருமுறை. அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அந்தப் பணம் எந்த மூலைக்கு காணும்? அவர்களுக்கு ஆண் துணை இருந்தால் கூலி வேலை செய்தாவது குடும்பத்தைக் கொண்டு நடத்தலாம். அவர்களுக்குத்தான் ஆண் துணையே இல்லையே. சந்தியாவின் தாயார்தான் கட்டிட வேலைக்குப் போய் சந்தியாவை படிக்க வைத்தார். பாடசாலை விடுமுறை நாட்களில் சந்தியாவும் தாயாருடன் சேர்ந்து கட்டிட வேலைக்குப் போய் வருவாள்.



இந்த நிலையிலும் சந்தியாவுக்குப் 10 ஆம் வகுப்பும் முடிந்து விட்டது. பெற்ற தாய்க்கு தன் மகளை பெரிய படிப்பு படிப்பித்து ஒரு டொக்ராகவோ அல்லது ஒரு இஞ்ஜீனியராகவோ ஆக்க வேண்டும் என்ற கனவுகள்தான் எப்போதும். எப்படியாவது மகளை நல்ல நிலைமையில் படிக்க வைத்து விட வேண்டும் என்பது சந்தியாவின் தாயின் நோக்கம். எந்தத் தாய்க்கும் தன் பிள்ளை நன்றாக

படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆசைதானே இருக்கும்.



இவர்கள் இருவரையும் பல தடவை சந்துரு கவனித்து வந்தான். அவனை அறியாமலேயே அவர்களை நினைத்து கவலைப்படுவான்.



பாவம் சந்தியா. சந்தியாவின் தாயும் மகளை படிக்க வைக்க வேண்டும் என்று ஆண்துணை இல்லாமல் வயதானா காலத்திலும், இந்தக் கொளுத்தும் அகோர வெய்யிலிலும் நின்று வேலை செய்து தன் மகளை படிக்க வைக்கின்றாவே..?



இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தானும் உதவி செய்ய வேண்டும் என்று சந்துருவின் மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. அந்த எண்ணமே அவனுக்கு சந்தியாவோடு கதைக்க வேண்டும் என்ற ஒர் உற்சாகத்தையும் கொடுத்தது.



பாடசாலையில் இருக்கும் போதும், சந்தியா எங்கு சென்றாலும் எந்தப் பக்கம் நின்றாலும் சந்துருவின் பார்வை அங்கே சென்றது. எப்படியாவது சந்தியாவிடம் பேசி விட வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் மனதுக்குள் ஓர் தடுமாற்றம்..... எப்படி கதைப்பது?.... என்னவென்று ஆரம்பிப்பது?....



இப்படியே போராட்டத்திலேயே பல நாட்கள் கடந்தன.



சந்தியாவும் சந்துருவைப் பார்க்கும் போதெல்லாம்.... சந்துரு நல்ல கெட்டிகாரனாக இருக்கிறான். நல்லா படிக்கின்றான். ஆனால் யாருடனும் கதைக்க மாட்டன் என்கிறானே..? என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு போய் விடுவாள்.



ஒரு நாள் பாடசாலை இடைவேளை நேரம். சந்தியா தனிமையாக இருந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தாள். இதை சந்துரு அவதானித்தான்.



காலையில் இருந்து சந்தியாவின் முகம் மிகவும் சோகமாக உள்ளதே.

ஏன்?..... எதுக்காக?....அவளிடம் போய் காரணத்தைக் கேக்கலாமா?....

என்று நினைத்தவனும்..... இல்லை வேண்டாம்... என்று தனக்குள்ளே குளம்பியவாறு நின்றான்.



இல்லை இன்று சந்தியாவோடு எப்படியாவது கதைக்க வேண்டும். இந்த வேளையில்.... விடிந்தால் மறுநாள் காலாண்டுத் தேர்வு. இதே சாக்காக வைத்து சந்தியாவிடம் கதைப்போம் என்று. சந்தியாவுக்கு அருகில் சென்றான் சந்துரு.



வணக்கம் சந்தியா....



என்ன சந்தியா?.... என்ன ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றீர்கள் போல தெரியுதே?.... நாளை பரீட்சைக்குத் தயாராகி விட்டீர்களா?.... என்று ஒரு தடுமாற்றத்தோடு கேட்டான் சந்துரு.



சந்தியாவுக்கு ஆச்சரியம்..... இது சந்துருவா?.... என்று தன்னையே ஒரு கணம் கேள்வி கேட்டு விட்டு தன்னையே மறந்து நின்றாள்.



சந்துருவின் குரல் மறுபடியும்....... "சந்தியா" என்றழைக்க......



சந்தியா திடுக்கிட்டாள்.



நான் கேட்டதில் ஏதும் கோவமா?......



சீச்சீ..... இது சந்துருவா?.... என்றுதான் யோசிச்சன்.



ஏன் சந்தியா அப்பிடி சொல்லுறீங்கள்?.....



இல்லை..... நீங்கள்தான் யாருடனும் கதைக்க மாட்டீங்களே அதுதான்.....

நான் ஒரு தடைவை குளம்பி விட்டேன் நீங்களா என்னுடன் வந்து கதைக்கிறீங்கள் என்று......



ஏன் நான் உங்களோடு கதைக்கக் கூடாதோ?.....



இல்லை நான் அப்பிடிச் சொல்லவில்லை.



அப்ப எப்பிடி சொல்லுறீங்கள்?.....



ஐயோ ஆளை விடுங்கோ... நீங்கள் நல்லாத்தான் கதைக்கிறீங்கள்...



சந்தியா சரி உங்களிடம் ஒன்று கேக்கலாமா?



தாராளமாகக் கேக்கலாமே...... ம்.........கேளுங்கோ.



கோவிக்க மாட்டீர்கள்தானே?....



இல்லை கேளுங்கோ.



காலையில் இருந்து ஏன் உங்கள் முகம் சோகமாக இருக்கின்றதே ஏன்?....



இல்லை சந்துரு. என் அம்மாவுக்கு வருத்தம் அதுதான் யோசிக்கிறன். அதுதான் கவலையாக இருக்கிறன். என்ன செய்வது என்று எனக்கே தெரிய வில்லை. எனக்கென்று இருக்கும் ஒரே ஓரு துணை என் அம்மாதான். அவாவுக்கும் ஏதும் என்றால் நான் என்ன செய்வேன்?....

என்று கலங்கிய கண்ணோடு நின்றாள் சந்தியா.



கடவுளே!..... இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை?.... என்று தனக்குள் தானே நினைத்துக் கொண்டு......



சந்தியா கவலைப்படாதீங்கோ. கடவுள் உங்களைக் கை விடமாட்டான். நான் உங்கள் அம்மாவைப் பார்த்து அடிக்கடி மிகவும் பெருமைப் படுகின்றனான். ஆண் துணை இல்லாமல் கஸ்ரப்பட்டு உங்களைப் படிக்க வைக்கின்றார் என்று. ஏதும் வீணாகாது நீங்கள் எதுக்கும் கவலைப்படாதீங்கோ. உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கோ என்று சொல்லி விட்டு....



சரி சந்தியா நாளை சந்திப்போம் என்று கூறி சென்று விட்டான் சந்துரு.



சந்தியாவுக்கு ஒரே ஆச்சரியம். எவ்வளவு அமைதியாக இருந்தவர் இப்ப இவ்வளவு அருமையாகக் கதைத்து விட்டுப் போகின்றாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அங்கு நடந்தவை எல்லாவற்றை யும் ஒன்று விடாமல் தன் தாயிடம் கூறினாள் சந்தியா . சந்தியாவின் தாயும்...... ம்..........நல்ல குடும்பப் பிள்ளை போல இருக்கு அதுதான் நல்லமாதிரி கதைச்சு இருக்கு..... என்றாள்.



இப்படியே ஒரு சில ஆண்டுகள் கடந்தன.



இருவரும் 12 ஆம் வகுப்பு முடித்து மேற் கொண்டு கல்லூரிப் படிப்பை தொடர் வதற்கு சந்துரு B.se விண்ணப்பம் போட்டு அதற்குரிய சீட்டும் கிடைத்து விட்டது.



சந்தியா B.com விண்ணப்பம் போட்டு அவளிற்கும் அதற்குரிய சீட்டும் கிடைத்து விட்டது. சந்தியா மேற்கொண்டு பணம் கட்டினால்தான் படிப்பை தொடர முடியும். ஆனால் சந்தியாவால் அவ்வளவு பணம் கட்டுவது என்பது முடியாத காரியம். சந்தியாவின் தாயாரும் தெரிந்த ஒரு சிலபேரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களும் இல்லை என்று கைவிரித்து விட்டனர். சந்தியாவின் தாய்க்கோ சரியான கவலை. இவ்வளவு பெரிய தொகையை தன்னால் எப்படிப் புரட்ட முடியும்? என்னால் முடியால் போய் விட்டதே என்ன செய்வது என்று.



ஒரு நாள் சந்துரு வழியில் சந்தியாவை பார்த்தான்.



வணக்கம் சந்தியா.... எப்பிடி இருக்கிறீங்கள்?...



ஓ..... சந்துரு உங்களைக் கண்டு கனநாளாகி விட்டதே....



ஆமாம் சந்தியா. நான் இந்த பார்ட்ரைம் வேலை எடுத்து செய்தேன் அதுதான் இந்தப் பக்கம் அடிக்கடி வரமுடியாமல் போய் விட்டது. அது சரி சந்தியா......

காலேஜ் சீட்டெல்லாம் கிடைத்து விட்டதா? எனக்குக் கிடைத்து விட்டது. கோயம்புத்தூரில்தான் கிடைத்திருக்கின்றது. நீங்கள் எந்த காலேஜ்?... எங்க தொடங்கப் போறீங்கள்?....என்று சந்தியாவைப் பார்த்து சந்துரு கேட்கவும்.



சந்தியா வாடிய முகத்தோடு காலேஜ் சீட்டெல்லாம் கிடைத்து விட்டது என்பது உண்மைதான் சந்துரு....ஆனால்.... என இழுத்தாள்.



என்ன சந்தியா ஆனால்?..... சொல்லுங்கோ



அந்த அளவு பணத் தொகையைக் கட்டுவது என்பது எங்களால் முடியாத காரியம் சந்துரு. அம்மாவுக்கும் வருத்தம். அம்மாவுடைய மனதில் இப்போது இருக்கும் எண்ணமெல்லாம் அவவின் காலம் முடிவதற்குள் என்னை ஒரு நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணம்

மட்டும்தான் சந்துரு.



சரி நான் ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீர்கள்தானே சந்தியா?.....



இல்லை சொல்லுங்கோ..... நான் கோவிக்க மாட்டேன்.



அந்த பணத்தை நான் கட்டுறன் நீங்கள் மேற்கொண்டு படியுங்கோவன்.



ஐயோ சந்துரு. அப்படி எல்லாம் வேண்டாம். நீங்கள் சொன்னதே எனக்கு பெரிய சந்தோசம். வேண்டாம் சந்துரு விடுங்கோ.... உங்களுக்கு சிரமம் வேண்டாம். இந்தப் பணத்தை நீங்கள் கட்டி விடலாம் அதற்குப் பிறகு நான் என்ன செய்வது?... ஒவ்வொரு முறையும் நான் உங்களை எதிர்பார்த்து நிற்பதோ?...இது எல்லாம் சரிப்படாது சந்துரு. வேண்டாம் சந்துரு விடுங்கோ. என் தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும்..... என்றாள்.



காதல் வந்தால் யாரைத்தான் விட்டு வைக்கும்?.... இதில் சந்துரு மட்டும் விதிவிலக்கா என்ன?...



சரி பரவாய் இல்லை விடுங்கோ சந்தியா. நீண்ட நாட்களாக உங்களிடம் ஒரு விசயம் கேட்க வேணும் எண்டு காத்திருந்தன். நான் கேட்டால் தப்பாக நினைக்க மாட்டீர்கள் தானே?.. நீங்கள் நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் நான் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் கையில் உள்ளது.



சரி கேளுங்கோ சந்துரு.....



உங்களை எனக்கு மிகவும் எனக்கு பிடிச்சிருக்கு சந்தியா. நான் உங்களைத் திருமணம் செய்து உங்களோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுறன். நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?....என்று மூச்சு விடாமல் சந்தியாவிடம் கேட்டான் சந்துரு.



என்ன சந்துரு நீங்கள் யோசிச்சா இதை கேக்கிறீங்கள்?.... இதை நினைச்சால் எனக்கு ஒரே வேடிக்கையாக இருக்கு... உங்கட அப்பா அம்மாவையளுக்கு இது தெரிஞ்சால் எவ்வளவு பிரச்சினை வரும்?.... என்னுடைய குடும்பத்திற்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஏணி வைச்சால் கூட எட்டாது.....என்றாள்

சந்தியா.



சந்தியா.... நீங்கள் என்னோடுதான் வாழப் போறீங்கள். என் குடும்பத்தோடு இல்லையே. உங்களிடம் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?... இல்லையா?.. இரண்டில் ஏதாவது சொல்லுங்கோ... yes or no .



சந்தியா மௌனமாக நின்றாள்.



சந்தியா உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் உடனே உங்களிடம் இருந்து பதில் வந்திருக்கும். என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று. இல்லையா?...நீங்கள் குடும்பத்தை சாக்குப் போக்கு சொல்லாதீங்கோ.... என்று சந்துரு சொல்லும் போதும் சந்தியா மௌனம் சாதித்தாள்.



திரும்பவும் சந்துரு குறுக்கிட்டான். என்ன சந்தியா?.... இந்த மௌனம் சம்மதத் திற்கான அறிகுறிதானே?......



சந்தியாவின் முகம் நிலத்தை பார்த்துக் கொள்ள... வெட்கம் கலந்த சிறிய புன்சிரிப்பு அங்கே பூத்தது.



படம்..................கர்ணா


பாடல்...............மலரே மௌனமா



சரி சந்தியா. இதைப் பற்றி நான் உங்கள் அம்மாவோடு கதைக்க வேணும் என்றாலும் கதைக்கிறன். உங்கள் அம்மா ஏதும் மறுப்பு சொல்லமாட்டாதானே?



தெரியேல்லையே சந்துரு... அப்படி எண்டா.... நீங்கள் அம்மாவை வந்து பாருங்களேன்.... என்று சொல்லி விட்டு சந்தியா அடுத்த பக்கம் திரும்பி நின்றாள்.



சந்துருவின் மனதில் மகிழ்ச்சி பொங்க.... சரி சந்தியா வெக்கப்பட்டதெல்லாம் போதும். நான் நாளைக்கே உங்கட அம்மாவை வந்து பாக்கிறன். சரி நீங்கள் வீட்ட போங்கோ. நானும் வெளிக்கிடுகின்றன்...... நாளை சந்திப்போம்....

என்று கூறியவனும்.....மீண்டும் சந்தியாவைப் பார்த்து.....



சந்தியா இப்ப நான் வீடு வரை கூட வரவேணுமோ?... என்று சிரிப்போடு ஒரு கேள்வி.



சந்தியா சந்துருவைப் பார்த்து.... சீ போங்கோ உங்களுக்கு பகிடி ரொம்பத்தான்...

என்றாள்.



சிரிப்போடு இருவரும் விடைபெற்றனர்.



மறுநாள் அதேபோல் சந்துரு சந்தியாவின் தாயைச் சந்தித்து அனைத்தையும் சொல்லி கேட்டான். அதற்கு சந்தியாவின் தாய் உங்கள் வீட்டில் கதையுங்கோ அவர்கள் சம்மதம் தெரிவித்தால் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றார்.

எங்கள் வீட்டில் விருப்பப்பட மாட்டார்கள் என்று எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இதற்கு நீங்கள் சம்மதிதால் நான் உங்கள் மகளை கரம்பிடித்து அவளைக் கண்கலங்காமல் வைச்சுக் காப்பாற்றுவேன்.....அதோடு




எங்கள் வீட்டில் நான் இதைப் பற்றி என்னுடைய அப்பா அம்மாவோட கதைப்பன். கதைக்க மாட்டன் என்று சொல்லேல்லை. எங்கள் வீட்டில் இதற்கு அவர்கள் சம்மதிச்சாலும் சரி சம்மதிக்கா விட்டாலும் சரி நீங்கள் சம்மதிச்சால் நான் உங்கள் மகளை திருமணம் செய்வேன்....... என்றான்.



சரி உங்கள் வீட்டில் கதைச்சுப் போட்டு வாங்கோவன். பிறகு மிச்சத்தைப்

பற்றி கதைப்போம்..... என்றார் சந்தியாவின் தாயார்



சரி எனக் கூறிச் சென்ற சந்துருவும் தன் காதல் பற்றி தன் பெற்றோரிடம் கூறினான். அவன் எதிர்பார்த்தது போலவே சந்துருவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.



மனம் சோர்ந்து போன சந்துருவும்... சந்தியாவின் தாயிடம் வந்து நடந்த வற்றைச் சொல்லி விட்டு.....



எங்கள் வீட்டில் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீங்கள்?..... என்றான்.



இதனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வராது எண்டால்... எங்களுக்கு ஒண்டும் இல்லை. இதில் எங்களுக்கு பூரண விருப்பம். இனி உங்கள் விருப்பம் போல செய்யுங்கோ..... என்று சந்தியாவின் தாய் பட்டும் படமால் கூறிவிட்டார்.



பிறகு என்ன?.....சந்துருவும் சந்தியாவும் ஆறு மாதகாலமாக காதர்களாக வலம் வந்தனர். அவர்களை அக்கம் பக்கம் உள்ளர்கள் பார்த்து பொறாமைப் படக்கூடிய அளவிற்கு இருவரும் காதலர்களாகப் பறந்து திரிந்தனர்.



படம்...................நிறம் மாறாத பூக்கள்


பாடல்.................இரு பறவைகள் மலை முழுவதும் அங்கும் இங்கும்



ஒருசில மாதங்களில் திருமணமும் நடந்து அதே அகதி முகாமிற்கு குடி வந்தார்கள் தம்பதிகள். அந்த அகதி முகாமில் மின்சார வசதி இல்லை. வசதியான வாழ்க்கை வாழ்ந்த சந்துருவுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. ஆனாலும் என்ன செய்வது?... ஒன்றை அடைய வேண்டும் என்றால் மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும்?.... என்று தனக்குள் தானே நினைத்துக் கொண்டு சந்தியாவை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான் சந்துரு.



இனி என்ன குடும்ப வண்டியை ஓட்ட வேண்டுமே?...இந்த சமயம்தான் வேலை தேடி ஒரு மலை உச்சியில் கல் குவாரி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான் சந்துரு. அந்த அகோர வெய்யிலில் மலைகளில் ஏறிக் கல் உடைப்பது என்பது லேசானா காரியம் இல்லை. கல் உடைக்கும் வேலை என்றால் யோசித்துப் பாருங்களேன். அதுவும் இந்தியாவில் அந்த கொழுத்தும் வெய்யிலில் எவ்வளவு சிரமம் என்று...



சந்துருவின் அப்பா அம்மாவுக்கு விருப்பம் இல்லாமல் நடந்த கலியாணம் என்றதால்...அவர்களுக்கு முன் தானும் நல்லா இருக்க வேண்டும். தன் மனைவி சந்தியாவையும் ஒரு குறையும் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், சிந்தனையும் சந்துருவின் மனதில்.



வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மின்சார வசதியுடைய பொருட்களுக்கு பெற்றறி போட்டுப் பாவிக்கக் கூடிய மாதிரி, ரிவி முதல் தொட்டு பேன், மிக்ஸி, பிறிச் என்று அனைத்துத் தளபாடங்களையும் வாங்கிக் கொடுத்தான்

சந்துரு.



அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தியாவுக்கு வந்த வாழ்க்கையை நினைத்துப் பொறாமைப்படும் அளவிற்கும், வாயில் கை வைத்து ஏங்கும் அளவிற்கும் இருவரும் கூடி வாழ்ந்தனர்.



இப்படியே அவர்கள் வாழ்க்கை உருண்டோடியது. இரண்டு ஆண்டுகளில் சந்துருவுக்கும் சந்தியாக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு வயதும் ஆகிவிட்டது. அந்தக் குழந்தைக்குச் சரிதா என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தனர்.



இவர்கள் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை அல்லது வசதி வாய்ப்பைக் கண்டவுடன் சந்தியாவின் மனம் தடுமாறி விட்டதோ தெரிய வில்லை. அல்லது சந்தியா வேறு விதமாக நினைத்தாளோ தெரியவில்லை. அல்லது கூலி வேலை செய்பவனோடு ஏன் குடும்பம் நடத்த வேண்டும் என்று நினைத்தாளோ பாவி தெரியவில்லை.



சந்தியாவின் வாழ்க்கையில் இன்னொருவன் குறுக்கிட்டான்.



அவன்தான் சிவா.



சந்துரு வேலைக்குப் போனபின் சந்தியா சிவாவின் வீட்டுக்குப் போவதும் அவனோடு வெளியில் போவதும் வழக்கம் ஆகி விட்டது.



சந்தியாவுக்கும் சிவாவுக்கும் எதோ தொடர்பாம்.... என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அரசல் புரசலாக பேசிக் கொண்டனர்



இது சந்துருவின் காதிலும் விழுந்தது.



சந்துரு தன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பிலும் பாசத்திலும் நம்பிக்கையிலும் அவன் அதையெல்லாம் காதில் போடவில்லை. நல்லா இருந்தால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பிடிக்காதுதானே. என்று தனக்குள் நினைத்துவிட்டு இதைப்பற்றி சந்தியாவிடமும் அவன் ஏதும் கேட்கவில்லை.



சந்தியாவின் கதையும் சிவாவின் கதையும் மிக மோசமாக பரவியது. சந்துருவின் வேலைதளம் வரைக்கும் போய் விட்டது. சந்துருவின் ஒரு நல்ல நண்பன் சந்துருவிடம் வந்து கூறினான். சந்துரு இப்படி கதை அடிபடுகிறது நானும் இரண்டு தடவை சந்தியாவையும் சிவாவையும் வெளியில் பார்த்தேன். நீ எதற்கும் உன் மனைவியிடம் போய் கதைத்துப்பார் என்றான்.



நான் என் மனைவியை நம்பித்தான் குடும்பம் நடத்திறன் அவள் எனக்குத் துரோகம் செய்ய மாட்டாள். அப்படி அவள் செய்தாலும் கூட யாரும் சொல்வதை நான் நம்ப மாட்டேன். நான் என்றைக்கு அதை நேரடியாகப் பார்க்கின்றேனோ அன்று என் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்வேன். என்று சந்துருவும் தன் நண்பனிடம் கூறி விட்டு வீட்டை நோக்கிச் சென்றான்.



வீட்டில் வந்து சந்தியாவிடம் நடந்தவை எல்லாவற்றையும் கூறினான் சந்துரு. அதற்குத் தான் இப்படி ஓர் பதிலையும் கூறி விட்டு வந்தேன் என்றும் கூறினான். அதற்கும் சந்தியா ஒன்றுமே சொல்லவில்லை.



இப்படித்தான் ஒரு நாள் காலை 6 மணியளவில் டொய்லெட் போவதற்காக வெளியே வந்தான் சந்துரு. அகதி முகாம்களில் பாத்ரூம் வசதிகள் எல்லாம் பெரும்பாலும் இருப்பதில்லை. திறந்த வெளியில் காட்டிற்குதான் போக வேண்டும். சந்துருவும் எழுந்தவுடன் டொய்லெட்டுக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தான். அந்த நேரம் பார்த்து சிவாவின் வீட்டுக்குள் இருந்து சந்தியா வெளியே வந்தாள். அகதி முகாம்களில் ஒரு லைனில் 10 வீடுகள் இருக்கும். சிவாவின் வீட்டை தாண்டித்தான் சந்துருவின் வீட்டுக்குப் போக வேண்டும். சந்துரு சந்தியாவைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சே கலங்கி விட்டது.



எத்தனைபேர் சொல்லியும் என் சந்தியாமேல் நான் சந்தேகப்படவில்லை. என் சந்தியாவா இப்படி?.... என்று தனக்குள்ளேயேதான் வெந்து வெதும்பி குறுகிப் போனான்.



உள்ளே வந்த அவனும் சந்தியாவைப் பார்த்து ஒன்றுமே கேட்கவில்லை. அப்படியே தன் மகளை தூக்கி நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு வழமை போலவே வேலைக்குச் சென்றான். வேலைக்குச் சென்றவனால் வேலையைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அரை நேரத்தோடு வேலைக்கு லீவு சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள்ளே சந்தியா நின்று கொண்டி ருந்தாள். சந்துருவைப் பார்த்தவுடன் சந்தியாவுக்கு ஒரு கணம் இதயத் துடிப்பே நின்றது போல் ஒரு பயம் ஏற்பட்டது. அந்தச் சமயம் சந்தியா 6 மாத கர்ப்பிணியாகவும் இருந்தாள். சந்துருவின் முகத்தை அவளால் பாக்க முடியவில்லை. சந்துருவும் சந்தியாவின் முகத்தைப் பாக்கவில்லை.



நேராக சமையலறைக்குள் சென்றான் சந்துரு.



நல்ல கூரான கத்தி ஒன்றை எடுத்தான். திரும்பி சந்தியா நிற்கும் இடத்தை நோக்கி வந்தான். சந்தியா அவனை பார்க்காமலேயே நின்றாள். சந்துரு சந்தியாவின் தலை முடியை இழுத்து பிடித்து தன் கைக்குள் சுருட்டிக் கொண்டான். தொடர்ந்து மூன்று குத்து கத்தியால் தொடர்ந்து குத்தினான். சந்தியா அலறிக் கொண்டு சந்துருவின் கையில் இருந்து வெளியே சென்றாள். அவன் அவளை விடவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி விட்டார்கள். ஒருவரையும் கிட்ட நெருங்கக் கூடாது என்று சொல்லி விட்டான். பிறகென்ன யார்தான் வருவார்கள்? அதுவும் கணவன் மனைவி பிரச்சினைக்குள்?..... சந்தியாவைப் பிடித்து தொடர்ந்து 16 கத்திக் குத்துக்கள் அவள் மேல் சரமாரியாக குத்தினான். அவளின் உயிர் அதே இடத்தில் பிரிந்தது.



அவ்வளவுதான். சந்துரு தன் மகளையும் தூக்கிக் கொண்டு நேராக காவல் துறையை நோக்கி நடந்தான். காவல் துறையில் நடந்தவை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தான். காவல் துறையும் சந்துருவை சிறையில் போட்டார்கள்.



காலங்கள் கரைந்தன.



சிறையிலிருந்து வெளியே வந்த சந்துருவும் தன் மகளுக்குத் தானே தாயாகவும் தானே தந்தையாகவும் இருந்து வளர்த்து வருகிறான். இப்போது

அவன் உயிர் வாழ்வதே அவன் மகளுக்காக மட்டுமே. அவன் உலகமே அவனின் மகள்தான்.



படம்...................


பாடல்:............... எந்தன் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல

No comments:

Post a Comment